Published Date: June 4, 2024
CATEGORY: CONSTITUENCY

யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியீடு தேர்தல் முடிவுகளுக்கும் கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும் -மதுரையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் தி.மு.கவினருக்கும், பொதுமக்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இனிப்புகளை வழங்கினார். நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் " வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல, ஐந்து அல்லது ஆறு கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் நடக்காத வகையில் மூன்று மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கருத்துக்கணிப்புகள் எடுத்த நிறுவனங்கள் அச்சடித்தது போல ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளன. அறிவு சார்ந்த மக்கள் கருத்துக்கணிப்பு முடிவுகள் நம்ப முடியாத வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை. ஒரு மாநிலத்தில் பா.ஜ.க எட்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் பா.ஜ.க 15 தொகுதிகளில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புகளுக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும் நாளை வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
Media: Tamil Sudar